மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை - நூல் அறிமுகம்
கர்நாடக சங்கீத உலகில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக விளங்கும் டி எம் கிருஷ்ணா அவர்கள்... தன்னைச் சார்ந்த சமூகத்தில் உள்ளவர்களால், கர்நாடக சங்கீத உலகில் நடக்கும் அவலங்களை தொடர்ந்து உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டே இருக்கிறார்..
அந்த வரிசையில் அவர் எழுதிய Sebastian and sons என்ற நூலின் தமிழாக்கமே மறைக்கப்பட்ட மிருதங்க சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை என்ற நூல்..
மிருதங்கம் செய்பவர்களுக்கும், அதனை வாசிப்பவர்களுக்கும் இடையில் உள்ள உறவுகளையும், அதில் உள்ள நுட்பமான சாதிய அரசியலையும் விரிவாக ஆராய்ந்து ஆவணப்படுத்தும் ஓர் ஆவண நூலாகவே இந்த நூல் திகழ்கிறது..
இசைக்கருவிகளை வாசிப்பவர்கள் மற்ற இசைக்கருவிகளை பயன்படுத்துவது போல் மிருதங்கத்தை அவ்வளவு எளிதாக பயன்படுத்த இயலாது.. அதற்கு அதை செய்பவர்கள் எப்போதும் அருகில் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது..
மிருதங்கம் எப்பொழுது வேண்டுமானாலும் பழுதுபடலாம்.. மிருதங்கத்தின் சுருதி எப்பொழுது வேண்டுமானாலும் குறையலாம்.. அதை சரி செய்வதென்பது வாசிப்பவர்களால் பெரும்பாலும் இயலாத காரியமாக உள்ளது எனவே மிருதங்கம் செய்யும் கலைஞர் ஒருவர் எப்பொழுதும் மிருதங்கம் வாசிப்பவருடன் இருக்க வேண்டிய சூழ்நிலை தேவை உள்ளது..
மிருதங்கம் வாசிப்பவர் மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும், மிருதங்கம் செய்பவர் கீழ்த்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.. அதாவது மிருதங்கம் செய்ய எருமை மாட்டுத்தோல், ஆட்டு தோல், பசுவின் தோல் தேவைப்படுகிறது.. இந்த தோல்களை வைத்து வேலை செய்வது என்பது மேல் தட்டு மக்களால் இயலாத காரியம் ஆகிறது.. எனவே அவர்களுக்கு இந்த தொழில்களை செய்பவர்கள் தேவைப்படுகின்றனர்..
"நெருங்காதே தூரப்போ" என எப்பொழுதும் விரட்டியே பழக்கப்பட்டவர்கள், மிருதங்க தேவைக்காக யாரை விரட்டினோமோ அவர்களையே அருகிலேயே வைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும் போது, அவர்களுக்கு இடையில் உள்ள உறவு எப்படி இருக்கும்?? என்னென்ன முரண்பாடுகள் இருந்திருக்கும்..? அதை மேல்தட்டு வர்க்கம் எப்படி அணுகியது? இந்த வாய்ப்பை கீழ் தட்டு வர்க்கம் எப்படி அணுகியது? இது இருவர் வாழ்க்கையிலும் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியது? இதனால் சமூகத்தில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தனவா? போன்ற பல்வேறு விஷயங்களை இவ் புத்தகம் மிகத் தெளிவாக ஆராய்ந்துள்ளது..
மேலும் மிருதங்கம் செய்யும் முறைகளையும் மிக நேர்த்தியாக அணு அணுவாய் விளக்கி வியக்க வைத்துள்ளது இவ் புத்தகம்..
பசுமாட்டை கொள்வது பாவம் எனக் கூறும் சமூகத்தினரே மிருதங்க தேவைக்காக உயிருடன் உள்ள பசுமாட்டை கொன்று அதன் தோலை வைத்து மிருதங்கம் செய்ய ஒரு சமூகத்தையே தன்னோடு வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் எனும் செய்தி வியப்பான முரணாக உள்ளது...
மேல் தட்டு மக்களுடன் பழகுவதாலேயே தாங்கள் சைவமாக மாறிய சிலரும்.. தங்கள் மனைவிகளை ஆத்துக்காரி என அழைக்கும் சிலரும்.. தங்கள் சமூகத்தில் தாங்கள் மேம்பட்டவராக உணரும் பலரும் அறியாமையின் உச்சங்களாக திகழ்கின்றனர்..
தனக்கு ஒவ்வாத வேலைகளை அதாவது ஆட்டு தோல் மாட்டு தோல் பசுந்தோல் போன்றவற்றில் செய்யும் வேலைகளை ஒரு இடத்திலும்.. தனக்கு தகுந்த தனது கண் பார்வையில் நடைபெற வேண்டிய வேலைகளை தனது வீட்டிலும் வைத்து செய்ய வைத்து.. தனக்குத் தகுந்த தோதான மிருதங்கம் உருவாகும் வரை சக்கையாக வேலை வாங்கி அதில் வரும் வருமானத்தில் சொற்ப ஊதியத்தை அவர்களுக்கு வழங்கி வாழ்ந்து வந்த பலரை பார்க்கும்போது, தனக்கு தேவையான வரும்போது சாதிய கட்டுப்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் தனக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொண்டு அதிலும் தன் லாபத்தை நோக்கமாகக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் சமூக பழக்கவழக்கங்களை மீட்டு உருவாக்கம் செய்யும் மேல் தட்டு வர்க்கத்தின் மீது மிகுந்த கோபம் வரவே செய்கிறது...
இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த மிருதங்க வாசிப்பாளர்களை பெரிதும் போற்றாமல், இடையில் வந்த பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களை உயர்வான இடத்தில் வைத்து பேசும் வழக்கமும், மிருதங்கம் செய்பவர்களுக்கு மிருதங்கம் சொந்தமில்லை எனக் கூறும் வழக்கமும், தன் குடும்ப சூழ்நிலைக்காக மிருதங்கம் செய்யும் தொழிலுக்கு வந்த சில பிராமணர்களின் நிலைகளும், அவர்கள் தன் தொழிலில் எந்த நிலையில் உள்ளார்கள் போன்ற கதைகளும், மிருதங்க தொழிலில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்.. கிட்டாங்கல் பொடியினை செய்ய அவர்கள் எவ்வளவு மெனக்கெடுக்கிறார்கள் போன்ற கதைகளும் இதுவரை அறியாத வாழ்க்கையினை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன...
டி எம் கிருஷ்ணா அவர்கள் இவ் புத்தகத்தை எழுத எவ்வளவு மெனக்கெடல் செய்துள்ளார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.. உதாரணமாக மாட்டை வெட்டும் இடத்திற்கு நேரடியாக சென்று எவ்வாறு வெட்டுகிறார்கள் என்பதை அவர் பார்த்த தருணங்களும்.. மாமிசம் சாப்பிடும் பழக்கத்தை தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்ட தருணங்களும்.. புத்தக தேவைக்காக ஒருவரின் சாதியை பற்றி விசாரிக்கும் போது அந்த கேள்வியை அவர் மனம் புண்படாத படி கேட்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொண்டு தகுந்த அளவில் கேள்வியை கேட்பதும்.. இவ் புத்தகத்தை எழுத தன்னுடைய சாதி தன் மூளையில் பதித்த பல பழக்கவழக்கங்களை தானே உணர்ந்து கொண்டு தன்னைத்தானே மாற்றிக் கொள்வதையும்.. மணி ஐயருக்கு கிடைத்த மகுடம் மிருதங்கம் செய்யும் கலைஞர் செபாஸ்டினுக்கும் கிடைக்க வேண்டும் என்கின்ற அவரது எண்ணமும் போற்றுதலுக்குரியது..
தஞ்சை மண்ணின் முக்கிய அங்கமான மிருதங்கம் தனக்குள் ஆயிரம் கதைகளை அடக்கிக் கொண்டு மிக அழகான இசையை வழங்கிக் கொண்டிருக்கின்றது... அந்த இசைக்குள்.. அந்த சுரத்துக்குள்.. அடங்கி இருக்கின்ற ஒரு சமூகத்தின் அடக்கி வைக்கப்பட்ட குறளின் மிக ஆக்ரோஷமான பதிவு அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்...
புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர்:- மறைக்கப்பட்ட மிருதங்க சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை
ஆசிரியர் பெயர்:- டி.எம்.கிருஷ்ணா
பக்கங்கள்:-334
விலை:-390
பதிப்பகம்:- காலச்சுவடு

Comments
Post a Comment