இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்
சுற்றுப்புற சூழலுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களை பார்த்து ஒரு கேள்வி எழுப்பினால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.?
* மரம் வளர்த்துள்ளேன்..
* பேரணிகள் சென்றுள்ளேன்..
* நெகிழிப்பை உபயோகத்தை குறைத்துள்ளேன்..
* இயன்ற அளவு நீர் மேலாண்மை செய்துள்ளேன்..
* எரிபொருட்களை, மின் சாதனங்களை, காகிதங்களை குறைவாக பயன்படுத்துகின்றேன்.. எனக் கூறுவீர்கள் அல்லவா
நீங்கள் சொல்லும் எந்த ஒரு காரணமும் சுற்றுச்சூழலுக்கு கடுகளவு கூட உதவி புரிவதாய் இல்லை என்று சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா?? ஏன் என்ற கேள்வி எழுகிறதா? வினாவை எழுப்பி.. விடையையும் கூறுகிறது இப்புத்தகம்..
ஆம் ஒரு நூறு மரக்கன்றுகளையும், வருடம் தோறும் ஆயிரம் விதை பந்துகளையும், கையில் மஞ்சள் பையுடனும் சுற்றுச்சூழல் மைந்தன் என திரிந்த என் மண்டையில் ஒரு கொட்டு கொட்டியது இப் புத்தகம்...
யானை பசிக்கு எறும்பு தீனி என்பது போல நம் செயல்கள் உள்ளன என உரக்க கூறி.. அழிப்பவனாலும், ஆள்பவனாலும் மட்டுமே இச்சுற்றுச்சூழலை காக்க முடியும் நம்மால் காப்பது போல் நடிக்க மட்டுமே முடியும் என உணர்த்தி உள்ளது இப்புத்தகம்..
கனவு நாயகனென நம் அனைவராலும் மதிக்கப்படும் போற்றப்படும் அப்துல் கலாம் அவர்களை கூட சுற்றுச்சூழல் எதிரியென கூறுகின்றார் ஆசிரியர்..
அண்டம், அணு, ஆக்ஸிஜன், உயிர் தோற்றம், மனிதனின் தோற்றம், வேளாண்மை தோற்றம், வணிகத்தின் தோற்றம், நுகர்வு வணிகத்தின் தோற்றம், மனித ஆசையின் தோற்றம் என அனைத்தையும் வரிசையாய் மிக எளிமையாய் எளிய உதாரணங்களுடன் எடுத்துக்காட்டி புரியும்படி விளக்கி உண்மையான சுற்றுச்சூழல் பிரச்சனை எது என நம்மை உணர செய்துள்ளது இந்த புத்தகம்..
இவ் புத்தகத்தை படித்து முடித்த பிறகு நீங்கள் சுற்றுச்சூழலை வேறொரு கண்ணோட்டத்தோடு பார்ப்பீர்கள் என்பது உண்மை அதாவது நீங்கள் ஃபேஷன் சுற்றுச்சூழல் ஆர்வலராய் இல்லாமல், குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டு மரங்களை நடாமல்.. உண்மையாய் தெளிவான சுற்றுச்சூழல் அரசியலில் மாட்டாத ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராய் மாறுவீர்கள்..
புத்தகத்தில் பிடித்த வரிகள்:-
* உலகத்தை கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவது போல உலகை அறிவியல் காப்பாற்றி விடும் என்று நம்புவதும் ஒருவகை மூடநம்பிக்கையே
* உலகம் மனித இனம் இல்லாமல் தான் தோன்றியது அது அழியும் போது மனிதகுலம் இருக்கப் போவதில்லை
* யாருமே குப்பை போடாத கடற்கரையில் சென்று குப்பை பெருக்கும் துடைப்பான்கள் எதுவும் போபால் ஆலையை பெருக்க சென்றதில்லை
* இந்த வானத்துக்கு அப்பால் என்ன இருக்கும்? 'கடவுள்' இதுதான் உங்கள் பதில் என்றால் நீங்கள் குப்புற கவிழ்ந்து உறங்கி விடுங்கள்
* ஒரு செய்தி உங்களுக்கு புரிகிறது என்றால் நீங்கள் அதில் பங்கு வகிக்கிறீர்கள் என்று பொருள், புரியவில்லை என்றால் அதிலிருந்து நீங்கள் பிரிந்திருக்கிறீர்கள்
* உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றார்கள் ஆனால் நாம் உப்பிட்ட கடலை மறந்த துரோகிகளானோம்
* உலகின் கழிவுகளை கொட்ட எந்த ஒரு செப்டிக் டேங்கும் இதுவரை கட்டவில்லை
* மழையை உடைத்து எடுக்கப்பட்ட அலுமினியம் தெருவில் குப்பையாக கிடக்கும் அந்த அலுமினியத்தை எடுப்பதற்காக விரட்டப்பட்ட பழங்குடிகளும் தெருவில் குப்பையாக கிடப்பர்
* இன்று ஆபத்தில் இருக்கும் உயிரினங்களில் ஒன்றாக விளிம்பு நிலை மக்களையும் சேர்த்தே கருத வேண்டும்
* கழிவு என்பது தவறான இடத்தில் இருக்கும் மூலப்பொருள்
புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- இயற்கை 24 × 7
ஆசிரியர் பெயர் :- நக்கீரன்
பதிப்பகம் :- காடோடி
பக்கங்கள் :- 136
விலை :- 170

sirappu
ReplyDelete