கிறுக்கல்கள் -அறிமுகம்
புதுமையைக் கூட
புதுமையாக செய்ய முயலும்
புதுமையான மனிதன்
பார்த்திபன் அவர்கள் எழுதிய கிறுக்கல்கள் புத்தகத்தில் மட்டும் புதுமைக்கு பஞ்சமா இருக்கப் போகிறது...
புத்தகத்தை திறந்த உடனே தன் முதல் கிறுக்கள்கள் என தன் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிட்டு இருப்பதும்..
மனைவிக்கு
"என்னை
நேசித்த
முதல்
கவிதை"
என எழுதி மனைவியின் புகைப்படத்தில் தலையில் ஐஸ் கட்டியை வைத்திருப்பதும்..
முதல் கவிதை என்ற வார்த்தையை ஆய்வுக்கு உட்படுத்தி முதல் என்ற வார்த்தை பொருத்தமா? உண்மையா? என விளக்கி இருப்பதும்..
இரண்டு பக்கங்களில் ஒன்றுமே எழுதாமல் ஒரே ஒரு கரும்புள்ளியை மட்டும் வைத்து நிரப்பி இது கவிதையா என நம்மை அடுத்த பக்கத்தை திருப்பாமல் யோசிக்க வைப்பதும்...
அடுத்த பக்கத்தில்
"வெறும் புள்ளி மட்டும் தான் நான்
வியாபித்திருக்கும்
வெற்றிடமாக
இதயம் முழுவதும் நீ"
என எழுதி முதல் இரண்டு பக்கத்திற்கு வலு சேர்த்து இருப்பதும்..
கவிதை புத்தகம் என நினைத்து புரட்டிக் கொண்டே வரும்போது நடுவில் தன் முதல் படம் பற்றிய கட்டுரை எழுதி இருப்பதும்..
திடீரென ஆங்கிலத்தில் ஐந்து வரியில் ஐந்து சொற்களை வைத்து கவிதை தந்ததும்..
பாரதி பற்றிய ஒரு கவிதையின் முன் பாரதியை வரையாமல் காகிதத்தில் சில கிழிசல்களை உண்டாக்கி அதில் பாரதியின் உருவத்தை காட்டி இருப்பதும்...
சில குறியீடுகளை வாக்கியங்களாக பயன்படுத்தியிருப்பதும்..
வெறும் கோடிட்ட இடங்களை கவிதையாக்கி அசத்தியுள்ளதும்..
இல்லை என்ற சொல்லின் மேல் உள்ள புள்ளிக்கு சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி வியக்க செய்ததும்..
அதே கவிதையில் இல்லை என்ற சொல்லின் பொருளை உணர்த்த இல்லை என்ற சொல்லில் உள்ள புள்ளியை துளையாய் செய்து காட்டியுள்ளதும்..
என பக்கங்கள்
திரும்பத் திரும்பத்
திரும்பத் திரும்ப
புதிதாய் ஏதோ ஒன்று நம்மை வியப்பில் புரட்டிப் போடுகிறது.. இப் புத்தகத்திற்கு பார்த்திபனின் மெனக்கெடல் நம்மை பிரமிக்க வைக்கிறது..
இந்த புதுமையெல்லாம் விற்காத சரக்குக்கு வியாபார யுத்தி என மட்டும் நினைத்து விடாதீர்கள்..
கவிதைகளில் கம்பனை தொடவும் முயன்றுள்ளார் பார்த்திபன் உதாரணத்திற்கு
"காலணிகளை விடும் இடத்து
கால்களையே விட்டுவிட்டு
உட்பிரகாரத்தில்
அடி பிரதட்சணம் செய்யுதே மனசு"
"ரோஜா மோதி
முள்ளுக்கு எலும்பு முறிவு"
போன்ற வரிகளும்
"காதல்
கல்யாணத்தில் முடியாது
ஆமாம்
என் காதல்
உன் கல்யாணத்தில் முடியாது"
"சாதல்
சாதாரணம்
காதல்
சதா ரணம்"
"அழுது கொண்டே இருப்பேன்
நீ அணைக்கும் வரை"
(மெழுகுவர்த்தியின் புகைப்படம் போட்டு இக்கவிதை உள்ளது)
"மௌனம் சம்மதம்
எனக்கு
சம்மதமில்லை
உன் மௌனம்"
எல்லாவற்றுக்கும் மேலாய் " விலக
விலக
புள்ளி தானே
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்??"
என்ற கவிதையில் கவிஞனாய் ஜொலிக்கின்றார் பார்த்திபன்..
இடையில் பெயர் சொல்லாத தன் பழைய காதலி பற்றிய ஒரு கட்டுரையும்.. தன் மனைவி பற்றிய ஒரு கட்டுரையும் உணர்வுகளின் உச்சம்..
இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள தேச தோஷம் தீர ஒரு பரிகாரம் பார்த்திபனுக்கே உரிய நக்கலின் உச்சம்..
கடைசியில் புத்தகத்தின் விலை
பணம் படைத்தவருக்கு 250
மனம் படைத்தவருக்கு 250+
என அதிலும் அசத்தி இருக்கிறார் பார்த்திபன்..
கவிதை புத்தகத்தில் ஒரு அட்வென்சர் வேண்டும் என்றால் தாராளமாய் புரட்டலாம் கிறுக்கல்களின் பக்கங்களை..
புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- கிறுக்கல்கள்
ஆசிரியர் பெயர் :- ரா.பார்த்திபன்






Comments
Post a Comment