தியாக பூமி - நூல் அறிமுகம்



அம்மா இல்லாத பெண் சாவித்திரி, அப்பாவின் அன்பு மழையிலும், சித்தியின் கோரப்பிடியிலும், வளரும் இவளுக்கு மிக பால்ய வயதிலேயே திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன.. திருமணம் தன்னை இந்த வீட்டிலிருந்து விடுவிக்கும் என்று நம்பும் இப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மிக சுவாரசியமாக நாவலாக கொடுத்துள்ளார் கல்கி அவர்கள்..

திருமண விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் கணவன்.. பணத்துக்காக மட்டுமே மருமகளாக இவளை தேர்வு செய்யும் மாமியார்.. வீட்டில் நடக்கும் எந்த ஒரு காரியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத மாமனார்.. இப்படிப்பட்ட வீட்டால் பாதிக்கப்பட்டு பிரசவ நேரத்தில் தனியாக பிறந்த வீட்டை நோக்கி வரும் சாவித்திரிக்கு.. பூட்டி கிடக்கும் வீடு வரவேற்றால் எப்படி இருக்கும்.?

ஏன் வீடு பூட்டி கிடக்கிறது?? அப்பா எங்கே? என்ன ஆனார்?? எங்கே போனார்?? என அவள் வயிற்றில் குழந்தையோடு தேடி அலையும் காட்சிகள்..

எங்கோ அனாதையாய் ஓரிடத்தில் பிள்ளை பெற்று.. இனி குழந்தையை எவ்வாறு வளர்ப்பேன் என வேலைக்காக தேடி அலையும் காட்சிகள்..

இறுதியில் இறப்பு மட்டுமே ஒரே வழி என முடிவெடுத்து மார்பளவு நீரில் இறங்கிய பிறகு வரும் திருப்பம்...

வாழ்ந்து தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து மாறி, வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற மன வைராக்கியம் வந்து அவள் எடுக்கும் முடிவு..

தன் குழந்தை என தெரியாமல் தன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள்... அந்த குழந்தை மீது எழும் பாசம்.. தன் குழந்தை தான் எனக்கு அறிந்த பிறகு தன் தந்தையிடமே ஆடும் நாடகம்..

எதிர்பாராத நேரத்தில் மீண்டும் தன் வாழ்க்கையில் குறுக்கிடும் கணவன்.. அவனால் தொடங்கப்பட்ட நீதிமன்ற வழக்கு.. வழக்கால் இணைந்த உறவுகள்.. வழக்கின் தீர்ப்பு..

எதிர்பாராத திருப்பத்துடன் இறுதி காட்சி என பரபரப்பாக நகர்கிறது நாவல்..

* சாதி மதம் என்பது எவ்வாறு ஒரு மனிதனை மற்றும் அவனின் குடும்பத்தை கட்டுப்படுத்துகிறது,

* நான்கு விதமாக பேசும் அந்த நான்கு பேரின் வாய்கள், ஒரு குடும்பத்தை எப்படி எல்லாம் பாதிக்கிறது

* ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழியை கடைபிடிக்க வேண்டுமா? வேண்டாமா?

* நமது யோசனையில் இல்லாத சில செயல்கள் எதார்த்தமாய் நடப்பது உண்மையில் கடவுளின் செயலா? விதியா? அல்லது எதார்த்தம் மட்டும்தானா..?

* நம்முடைய பிரச்சனைகள் துன்பங்கள் போன்றவற்றை யோசித்து நாம் எடுக்கும் முடிவுகள் நம் குழந்தைகளால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அவர்களையும் யோசித்து நாம் முடிவெடுக்கிறோமா?

* மன்னிப்பு என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டியதா..? அல்லது மன்னிப்பதற்கு ஏதேனும் வரைமுறை வேண்டுமா?

* குழந்தை பேறு என்பது பெண்களுக்கு வரமா..? அல்லது சாபமா..?

போன்ற பலவற்றை இந்த நாவலின் வழியாக சிந்தித்து அறியலாம்..

புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- தியாக பூமி
ஆசிரியர் பெயர் :- கல்கி

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்