தாயம் - நூல் அறிமுகம்



மஹத்ரயா ரா என்ற புனைப்பெயர் கொண்ட T T.ரங்கராஜன் அவர்களால் எழுதப்பட்ட Unposted letter என்ற நூலின் தமிழாக்கமே தாயம் என்ற இந்த புத்தகம்.. மொழிபெயர்த்தவர் நாகலட்சுமி சண்முகம் அவர்கள்.. படிக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வு ஒரு இடத்தில் கூட வரவில்லை என்பது கூடுதல் சிறப்பு...

இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகள் கொண்ட ஒரு நூல், இந்நூலின் சிறப்பே, கட்டுரையினுடைய நீளம் தான்.. இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்குள்ளாகவே அனைத்து கட்டுரைகளும் முடிவுறுகின்றன.. மிகக் குறைந்த அதேசமயம் சிறப்பான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நறுக்கென வார்த்தெடுத்த கட்டுரைகள்...

சிலருக்கு புத்தகம் படிக்கும் போது முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிடும் பழக்கம் இருக்கும், நீங்கள் அப்படிப்பட்ட வாசகர்களாக இருந்தால், இப் புத்தகம் முழுமையும் நீங்கள் அடிக்கோடு இட வேண்டி இருக்கும், அவ்வளவு நுணுக்கமாக ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்தெடுத்து முன் பின் நிறுத்தி மனதோடு பொருத்தி எழுதப்பட்ட கட்டுரைகள்..

ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பு கூட நம்மிடம் ஏதோ ஒரு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது..

புத்தக துவக்கமே "இப்புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து பாருங்கள் விடை தேடுபவர்களை தேடிக்கொண்டிருக்கிறது விடை" என்று எழுதப்பட்டு துவங்குகிறது.. பெரும்பாலும் வினாக்கள் விடைகளை தேடுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன் இங்கோ விடைகள் காத்துக் கொண்டிருக்கின்றன வினாக்கள் உங்களிடம் உள்ளனவா என்று துவங்கும் துவக்கம் அருமை...

நாம் கொடுக்கும் அல்லது பெரும் ஒரு பரிசு பொருளிலிருந்து ஆரம்பித்து கல்வி, உறவுகள், பணம், நேர்மை, உழைப்பு, இன்பம், கடவுள் என வாழ்வின் அத்தனை பரிமாணங்களையும் வேறு ஒரு கோணத்தில் இருந்து வேறு ஒரு பார்வையிலிருந்து கூறி படிக்கும் நம்மை வேறு ஒரு மனிதனாகவே மாற்றக்கூடியது இப்புத்தகம்...

* கொடுக்கப்படும் பொருளின் பின்னால் உள்ள இதயத்தை அடையாளம் கண்டு கொள்ளும் போது தான் அப்பொருள் பரிசாகிறது..

* காரில் ஏற்படும் ஒரு கீறல் நம் ரத்த கொதிப்பை உயர்த்துகிறது ஆனால் பிறர் இதயத்தில் நாம் ஏற்படுத்தும் கீறல் பற்றி நாம் கவலைப்படுவதில்லை..

* செம்மையாக உபயோகித்தால் ஒரு சிப்பாய் கூட ராணியாக உரு மாறும்

* புத்திசாலியும் முட்டாளும் ஒரே விஷயத்தை தான் செய்கின்றனர் ஆனால் அதை வெவ்வேறு கால கட்டங்களில் செய்கின்றனர்..

* வாழ்க்கையின் வளர்ச்சி பாதையில் எட்டாம் வகுப்பு வெற்றியை காட்டிலும் பத்தாம் வகுப்பு தோல்வி மேலானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

* உலகம் உங்கள் தலை மீது ஒன்றும் இயங்கிக் கொண்டிருக்கவில்லை நீங்கள் இல்லாவிட்டாலும் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கும்..

* வெறுப்பவர் மற்றும் வெறுக்கப்படுபவருக்கு இடையே பார்த்தால் எப்பொழுதும் அதிகமாக காயப்படுவது வெறுப்பவர் தான்..

* அனைத்தையும் அசாதாரண ஆர்வத்துடன் செய்த சாதாரண மக்கள் தான் அசாதாரணமான மக்கள்..

* ஒரு குழந்தையால் சரிவர கருத்து பரிமாற்றம் செய்ய முடியவில்லை என்றால் அது மூன்று மொழிகளை கற்று என்ன பயன்?

என ஒவ்வொரு கட்டுரையிலும் பல வரிகள் இதுபோல் மிக எளிமையாய் ஆனால் ஆழமான உள் கருத்துகளுடன் உறங்கிக் கொண்டிருக்கிறது படித்து பார்த்து உங்கள் வினாக்களுக்கான விடைகளை பெற்றுக் கொள்ளுங்கள்...

புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- தாயம்
ஆசிரியர் பெயர் :- மஹாத்ரயா ரா
தமிழில் :- நாகலட்சுமி சண்முகம்

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்