யானை டாக்டர் - நூல் அறிமுகம்



ஒரு உன்னத படைப்பை வாசித்து முடித்த முழு திருப்தியும் கிடைத்த அனுபவத்துடன் எழுதுகின்றேன் இவ் விமர்சனத்தை...

ஒரு யானையின் பிணக் கூராய்வுடன் அறிமுகமாகிறார் டாக்டர் கே எனப்படும் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி...

ஒரு யானையை, அதுவும், காட்டில் பல நாட்களுக்கு முன் இறந்து கிடக்கும் யானையின் உடலை பிணக்கூறாய்வு செய்வதற்கு, ஒரு மனிதனுக்கு எவ்வளவு மனோபலம் வேண்டும் அல்லது இயற்கையின் மீது எவ்வளவு காதல் வேண்டும் அல்லது தன் பணியின் மீது எவ்வளவு நேசம் வேண்டும் என்பதை புரிய வைக்க எழுத்தாளர் கை கொண்டு உள்ள யுக்தி மிகவும் சிறந்தது...

பிணக்கூறாய்வு செய்பவருடைய மனநிலை பற்றி எதுவும் கூறாமல் அதை பார்த்தவரின் மனநிலை பற்றி மிக விரிவாக விவரித்து, யானை டாக்டர் மீது, யானையை விட பன்மடங்கு பெரிய மரியாதையை விதைத்து விடுகின்றார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்...

வன காவலர், யானை டாக்டரிடம் முதன் முதலில் உரையாடும்போது, யானை டாக்டர் சொல்வதாக, எழுத்தாளர் எழுதியுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது... ஆழ்ந்து படித்தால், உண்ண மட்டுமே தெரிந்த புழுக்கள் கூட உங்களுடைய வளர்ப்பு பிராணியாக மாறலாம் ஆச்சரியம் இல்லை...

அடிபட்ட செந்நாய்க்கு உதவி செய்யும் காட்சிகள் புத்தகத்தை கீழே வைத்து விடாமல் புற உலகத்தை மறக்கடிக்க செய்து வாசிக்க வைக்கும் அற்புத இடங்கள்... இறுதியில் செந்நாய்க்கு வைத்தியம் ஏதும் செய்யாமல் நாம் செய்ய வேண்டியது என்ன என்று டாக்டர் கொடுக்கும் விளக்கம் சிறப்பு...

"இறையனப்படுவது ஒன்று உண்டென்றால் அது ததும்ப சொட்டிய ஒரு துளியே நான்" இவ் புத்தகத்தில் எனக்கு மிகப் பிடித்த வரிகள் இவை.. இவ்வரிகள் குறிப்பது யானை டாக்டரையோ.. அல்லது மிகப்பெரிய ஞானியோ அல்ல.. கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள் உண்மை என ஒப்புக் கொள்வீர்கள்...

குடித்துவிட்டு உடைத்தெறியும் கண்ணாடி பாட்டில்களின் சில்லுகள் ஒரு மகத்தான யானையின் மரணத்தை எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதை கண்முன்னே காட்சிகளாய் நிறுத்துகிறது இப்புத்தகம்..

இவ்வாறு மரணத்தை நோக்கிய ஒரு யானையை காப்பாற்றும் காட்சியில், புழுவை பார்த்தே மயங்கி விழுந்த வனக்காவலர், யானையின் காலில் விழுந்த சீழ் நீர்களை எடுக்க டாக்டருக்கு உதவும் அளவுக்கு மாறியது கதையின் போக்கில் சிறப்பு... இந்த மாற்றம் அனைத்து மனிதர்களும் நிச்சயம் நிகழ வேண்டிய மாற்றம்..

யானை டாக்டருக்கு, வன காவலர் செய்ய நினைக்கும் ஒரு சிறப்புக்கு யானை டாக்டர் கோவப்படும் காட்சிகளும், அதற்கு வன காவலர் பதில் கூறும் காட்சிகளும், மனதை தொடுபவை.. இறுதியாய் எதையும் அலட்டிக் கொள்ளாமல் "என்ன பலூன் உடைந்து விட்டதா?" என யானை டாக்டர் கேட்கும் கேள்வி? நம் நாட்டின் நிலையையும்.. நம் மக்களின் மனநிலையையும் மறு பரிசீலனை செய்ய வைக்கும் என நம்புகிறேன்..

யாரை தூக்கி வைத்து கொண்டாட வேண்டும்.. யாரை கொண்டாடிவிட்டு விட்டுவிட வேண்டும் என்ற புரிதல் நம் அனைவருக்கும் வேண்டும்...

இறுதியாய் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கதையின் கற்பனை அல்ல.. அவர் நிஜம்.. ஒரு உண்மை நாயகனின் உயர்ந்த பதிவு இப்புத்தகம்...

புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- யானை டாக்டர்
ஆசிரியர் பெயர் :- ஜெயமோகன்

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்