ரஃப் நோட் - நூல் அறிமுகம்
திரு ஆயிஷா நடராசன் அவர்கள் ஒரு மிகச்சிறந்த கதை சொல்லியாக இப்புத்தகத்தில் திகழ்கிறார்..
பல கதைகளை தொகுத்து ஒரே கதையினுள் முடிச்சிட்டு, ஒரு துளி அளவு கூட சுவாரசியம் குறையாமல், அதே சமயம் பல கதைகளை படிக்க வைக்கும் நிகழ்வை நிகழ்த்தி காட்டியுள்ளார் ஆயிஷா நடராசன் அவர்கள்
இவருடைய கதைடாஸ்கோப் என்ற புத்தகத்திலும் இதே போன்றதொரு கதை சொல்லும் முறையை பயன்படுத்தி இருப்பார் ஆயினும் அந்தப் புத்தகத்தில் கதைகளை ஒரே கதைக்குள் கோர்க்க வேண்டும் என்கின்ற மெனக்கெடல் வெளிப்படையாக தெரியும்.. ஆனால் இந்த புத்தகம் கதையினுள் பல கதைகள் மிக கச்சிதமாக பொருந்தி கதைடாஸ்கோப் புத்தகத்தை விட மிகச் சிறப்பான புத்தகமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது...
முதல் ஐந்தாறு பக்கங்கள் ஏதோ சம்பந்தம் சம்பந்தமில்லாமல் வரிகள் இருப்பதாக தோன்றலாம் பிறகுதான் புரிகிறது சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் ஒருவகையான பிரச்சனையில் உள்ள குழந்தையைப் இப்புத்தகத்தின் நாயகனாக தேர்ந்தெடுத்துள்ளார் என்பது..
தனக்குத் தானே பேசிக் கொள்ளும், அடிக்கடி பொருட்களை மறந்து விடும், கற்றல் குறைபாடுடைய ஒரு குழந்தையை நம் கண் முன் நிறுத்தி, அந்தக் குழந்தை தன்னை பற்றி தானே பேசிக் கொள்வதையும், தன் காதில் விழும் ஒவ்வொரு சொற்களுக்கும் தன்னை மறந்து ஒரு கதைக்குள் மூழ்கி திளைப்பதையும், அருமையாக வார்த்தையுள் வடித்துக் காட்டி, அக்குழந்தையின் உண்மையான நிலைமையை நமக்குள் கடத்தி இருக்கிறார் இப் புத்தகத்தின் ஆசிரியர்...
கேலியாய் அக்குழந்தையை கிண்டல் செய்யும் மாணவர்கள் மத்தியில் அவனுக்கு மரியாதை தரும் ஒரே மாணவன்.. அவன் மீது இக்குழந்தை கொண்டுள்ள எண்ணம்.. சேட்டை என்ற பெயரில் மற்ற மாணவர்கள் இக்குழந்தையை ஏமாற்றி செய்ய சொல்லும் பல காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் சிந்திக்கவும் வைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை...
பல காட்சிகளில் நம் அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளை நம் கண் முன் நிறுத்துகிறது இப்புத்தகம்... இப்புத்தகத்தின் இடையிடையில் வரும் பல கதைகள் தனியான கதை போல் இல்லாமல் இக்கதையின் போக்குடனே இணைந்து பிணைந்து வந்திருப்பது இப்புத்தகத்தின் வெற்றிக்கான மிகப்பெரிய காரணம்...
காணாமல் போன ரஃப் நோட் எங்கே என தேடித் திரிந்து கடைசியில் அவன் கண்டுபிடித்த பிறகு அந்த ரஃப் நோட் நம் மன அலமாரியில் என்றும் நீங்காமல் அமர்ந்து கொள்கிறது.. அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம் ரஃப் நோட்
புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :-ரஃப் நோட்
ஆசிரியர் பெயர் :- ஆயிஷா.இரா.நடராசன்

Comments
Post a Comment