வாசிப்பது எப்படி? - நூல் அறிமுகம்
வாசிப்பது எப்படி?-என்ற தலைப்பை பார்த்ததும், ஒரு புத்தகத்தை எப்படி எல்லாம் வாசிக்கலாம்? வாசிக்க வேண்டும், விரைவாய் புத்தகத்தை வாசிக்க என்ன வழி? போன்ற தகவல்கள் இருக்கும் என நினைத்தேன். ஆனால், தற்பொழுது புத்தக வாசிப்பில் உள்ள பிரச்சனைகளையும், புத்தக வாசிப்பால் அடையும் பயன்களையும் மிக ஆழமாகவே பேசி உள்ளார் செல்வேந்திரன்....
தற்பொழுது வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளதால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என அவர் மன வேதனையுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகள் ஒரு ஆசிரியராய் நாம் அனைவரும் தினந்தோறும் சந்தித்து வரும் சவால்களின் பிரதிபளிப்பாய் உள்ளது..
எது உண்மையான சமூக இழிவு என்னும் தலைப்பில் இவர் கேட்ட கேள்விகளும் இறுதியாய் அனைத்து சமூக இழிவுக்கும் காரணம் வாசிப்பற்ற நிலையே எனக் கூறி வாசிக்காமல் இருப்பதே உண்மையான சமூக இழிவு என உணர வைத்திருப்பது அருமை...
ஏன் வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் இறுதியாக "கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்து தான் ஆக வேண்டும் ராசா" என முடித்திருப்பது அழகு
ட்ரெண்டிங்னா என்ன? என்னும் தலைப்பு கண்டிப்பாக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவர்களைப் பார்த்து கேட்க வேண்டிய முக்கியமான பதிவு..
புத்தகத்தை வாசித்தவன் அடையும் மனமாற்றத்தை, வாழ்க்கையின் வளர்ச்சியை, சிந்தனையில் ஏற்படும் உச்சத்தை, அழகான உதாரணங்களால் சில மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திக் கூறியது சிறப்பு..
உலக பணக்காரர்கள் பலர் செல்போன் உபயோகிப்பது கிடையாது என்ற செய்தியும், ஒரு வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்ததன் மூலம் ஒரு வருடத்திற்கு 25 ஆயிரம் பக்கங்கள் படிக்க முடிந்தது என்ற அவரது சொந்த அனுபவமும் நம்மை சிந்திக்க செய்கிறது..
இறுதியாய் புத்தகத்தை படிப்பவர்கள் எல்லாம் வாசகன் அல்ல எனக் கூறி வாசகனாய் இருப்பதற்கான தகுதி என்ன என்ன என விவரித்துக் கூறியிருப்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் சேர்த்து தான்
படிக்க வேண்டிய 50 புத்தகங்கள் என இறுதியாய் இணைப்பு செய்யப்பட்ட புத்தகப் பரிந்துரைகள் மேலும் சிறப்பு
வாசிப்பது எப்படி? வாசிக்க வேண்டிய புத்தகம்
விமர்சனம் செய்தவர் :- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :-வாசிப்பது எப்படி?
புத்தகத்தின் ஆசிரியர் :-செல்வேந்திரன்

 
 
 
Comments
Post a Comment