கரும்பலகையில் எழுதாதவை - நூல் அறிமுகம்
இவர் கவிதை எழுதவில்லை, பல கருத்துள்ள விதைகளை என்னுள் விதைத்து சென்றுள்ளார்.
படிப்பவர் யாராக இருந்தாலும், அவர் நெஞ்சிலும் இந்த விதைகள் நிச்சயம் முட்டி முளைத்து விடும் அற்புத உயிர் உள்ள விதைகள் இக்கவிதைகள்..
இப்புத்தகத்திலுள்ள 45 கவிதைகளை படித்து முடிப்பதற்கு ஓரிரு மணி துளிகள் போதும், இப்படித்தான் படித்தும் முடித்தேன். ஆனால், இந்த புத்தகத்தின் பாதிப்பிலிருந்து வெளியில் வர ஒரு யுகம் போதாது, வெளியில் வர விரும்பவும் இல்லை!
ஆசிரியர் போட்டிருக்கும் சட்டையில், இறந்த தன் அப்பாவின் முகம் பார்க்கும் குழந்தை அதிகமாகவே என்னை யோசிக்க வைத்தது..
இயற்கை உபாதைக்கு முதலில் அனுமதி கேட்பவனை அனுமதித்துவிட்டு, பின் தொடர்பவனை அதட்டும் ஆசிரியர்களில் நானும் ஒருவன்.. அக்கவிதை என் தலையிலும் ஒரு கொட்டு கொட்டியது...
குழந்தைகள் உறவை வேரறுப்பதில்லை, காய் விடுதலோடு முடித்துக் கொள்கிறார்கள், பழம் விடுவதற்கு ஏதுவாக - என்ற கவிதையில் ஆழப் புதைந்து போனேன்..
அம்மா தினமும் அடிக்கிறாங்க, அப்பாவை கொன்றது என் ஜாதகம் தானாம் - என அழும் குழந்தைக்கு, ஆறுதல் சொல்ல முடியாமல், உன் அம்மா ஜாதகம் என்ன வேடிக்கை பார்த்ததா? எனக் கேட்பது அருமையிலும் அருமை...
தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கும் பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் எனக் கூறும் கவிதையை என்ன சொல்ல ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...
ஒரு ஆசிரியராய் என்னை அதிகமாகவே செதுக்கியது இப்புத்தகம்..
விமர்சனம் செய்தவர் :- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர்:- கரும்பலகையில் எழுதாதவை
புத்தகத்தின் ஆசிரியர்:- பழ.புகழேந்தி

Comments
Post a Comment