தண்ணீர் தேசம் - நூல் அறிமுகம்
இது கவிதை புத்தகமா? கதை புத்தகமா? அல்லது விஞ்ஞான அதிசய குறிப்பு புத்தகமா? என என்னால் இன்னும் கூட பிரித்தறிய இயலவில்லை. ஆனால் என்னை அதிசயத்தில் ஆழ்த்திய மீண்டும் மீண்டும் என்னை வாசிக்க வைத்த புத்தகம் என்றால் அது மிகையாகாது
நீண்டு பறந்த நீலக்கடல், அதன் மீது அச்சம் கொண்ட ஒரு மங்கை, மங்கையின் அச்சத்தின் மீது அச்சம் கொண்ட ஒரு காதலன், காதலனின் அச்சமில்லா வாழ்க்கை பார்த்து அச்சம் கொண்ட மங்கையின் தந்தை, மீனவ நண்பர்கள் ஒரு நான்கு பேர் என மிகக் குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு நகர்கிறது இந்த கதை...
வாழ்க்கையின் அத்துனை கேள்விகளுக்கும், கிட்டத்தட்ட அதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி, சூழ்நிலைக்கு தகுந்த பதிலை கொடுத்து விடை அளித்திருக்கிறார் வைரமுத்து...
புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் வைரமாய் மிளிர்கிறது..
காதல் எனும் உணர்வுக்குள் எளிதாய் நுழைந்து விடலாம், ஆனால், அதன் அடுத்த கட்டமான திருமணம் எனும் உறவுக்கு நகரத்தான் எக்கச்சக்கமான மனப்போராட்டங்களை கடக்க வேண்டியுள்ளது...
ஆணோ அல்லது பெண்ணோ தன்னுடைய நடைமுறை வாழ்க்கையினை, தன்னுடைய சுபாவத்தினை, ஏதோ ஒரு காரணத்திற்காக மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.. இக்கதையில் அந்த நிர்பந்தம் கதையின் நாயகிக்கு ஏற்படுகிறது..
அந்த நாயகியை, தன்னுடைய வாழ்க்கை சூழ்நிலைக்கு மாற்ற நாயகன் செய்யும் சில செயல்கள், விபரீதமாக முடிந்து, பல போராட்டங்களை கடந்து, சுபம் என முடியும் வரை, ஒரு காட்சி கூட சலிப்பு தட்டாமல் நம்மை அடுத்தடுத்த பக்கங்களுக்கு நகர்த்தி செல்கிறது...
இடை இடையில் வருகின்ற தத்துவ கவிதை வரிகள் நம்மை பெரிதாக யோசிக்க வைக்கிறது.. எடுத்துக்காட்டாக நோய் ஒரு வரம் என சொல்லும் கவிதை, எதையும் உள்ளே ஒலிக்காதே என சொல்லும் கவிதை,
இதற்குத்தானா மனிதப்பிறவி என கேட்கும் கவிதை, என கூறிக் கொண்டே போகலாம்..
இடையிடையில் வருகின்ற விஞ்ஞான துணுக்கு தகவல்கள் நம்மை ஆச்சிரியத்தின் எல்லைக்கு கொண்டு செல்கின்றன..
அதைவிட பசியும் சூழ்நிலையும் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் காட்சிகள் அப்பப்பா அபாரம்...
உதாரணமாக பசியின் கொடுமை தாங்காமல் எலியை கூட இரக்கம் இல்லாமல் தின்ற ஒரு அசைவ விரும்பி மீனவர் சுத்த சைவமாக மாறும் காட்சியும்.. அதே நொடியில் சுத்த சைவமாக இருந்த நாயகி ஆமையின் ரத்தத்தை கொடுங்கள் தாகமாக இருக்கிறது என கேட்கும் காட்சியும் உச்சத்தின் உச்சம்
கடனாக வாங்கி படித்த புத்தகம், திருப்பித் தர மனமில்லாமல் என்னுடனே பயணித்துக் கொண்டிருக்கிறது தண்ணீர் தேசம்...
விமர்சனம் செய்தவர் :- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர்:- தண்ணீர் தேசம்
புத்தகத்தின் ஆசிரியர்:- வைரமுத்து

 
 
 
Comments
Post a Comment