சோலைமலை இளவரசி-நூல் விமர்சனம்
சுதந்திரப் போராட்டம் என்பதும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கை என்பதும், நமக்கெல்லாம் ஒரு இறந்த கால கதையே,
இதயத்தில் இரக்கம் உள்ளவர்களால் மட்டுமே அவர்களின் வழியை கொஞ்சம் (கொஞ்சம் மட்டுமே) உணர முடியுமே தவிர, மற்றவர்களுக்கெல்லாம் அது சமூக அறிவியல் பாடத்தில் வருகின்ற வினா விடையே..
அவர்களின் தியாகம் எப்படிப்பட்டது, அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும், சிறைக்கு ஒருவன் செல்லும்போது அவனுடைய வலி, சென்ற பிறகு அவனுடைய வலி, சென்று விடுதலையாகி வந்த பிறகு அடைகின்ற பெருவலி இதனை எல்லாம் நம்மால் முழுக்க உணர முடியுமா.. முடியும்... இந்த சோலைமலை இளவரசி நாவலில் நாமும் தேச பக்தன் குமாரலிங்கமாக மாற ஆரம்பிக்கும் போது...
கதை முண்ணும் பின்னுமாக, முற்காலத்திலும் இக்காலத்திலும் நடைபெறுவதாக அருமையாக வடிவமைத்துள்ளார் கல்கி அவர்கள்..
ஒரு இடத்தில் கூட புத்தகத்தை கீழே வைக்க மனமில்லாமல் முழுவதுமாக படித்து முடித்த பிறகும் பிடித்துக் கொண்டே இருந்தேன் கைகளில்.. புத்தகத்தின் உடைய கடைசி பக்கத்திலே உள்ளது இப்ப புத்தகத்தினுடைய பெயருக்கான பொருத்தமான காரணம்..
மாறலேந்தன் உலகநாத தேவன் தான் குமாரலிங்கமா? குமார் லிங்கம் தான் மாறலேந்தன் உலகநாத தேவனா? நூறு வருடத்திற்கு பின் மீண்டும் பிறந்தவனா குமாரலிங்கம்? அவனுடைய முற்பிறவியின் காதலி மாணிக்கவள்ளி தான் பொன்னம்மா வா? அன்று நடந்த அதே நிகழ்வுகள் தான் இப்பொழுது நடக்கின்றனவா? என பலவாறு யோசிப்பவர்கள் இப்படியும் கொஞ்சம் யோசித்து இந்த புத்தகத்தை பார்க்கலாம்.. அதாவது அன்று நடந்த அதே தான் இன்றும் நடக்கிறது, அதே ஆட்சி, அதே வெள்ளையர்கள், அதே கொடுமைகள் என்பதை உணர்த்த தான் இரண்டு கதைகளிலும் ஒரே போல் நடப்பதாக சித்தரித்திருக்கிறார் கல்கி...
சுதந்திரம் கிடைத்துவிட்டது என்ற இந்த ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு, இரண்டு முறை கதையின் போக்கை அட்டகாசமாக திருப்பி, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் கல்கி... இரண்டு முறையுமே குமாரலிங்கத்தின் நிலை பரிதாபகரமாகவே உள்ளது...
பெண்கள் என்றாலே அப்பாக்களின் தேவதை.. அதுவும் அன்னை இல்லாப் பெண் என்றால் சொல்லவே தேவையில்லை.. அப்பாக்களினுடைய அன்பு மழை என்றென்றும் அவளுக்கு மட்டும் தான்.. அதே சமயத்தில் அவள் என்னுடைய எதிர்கால வாழ்க்கையை பற்றி முடிவு எடுக்கும் போது இந்த அன்பு மாறுமா..? அப்போது அப்பாக்களின் மன ஓட்டமும் பெண்ணின் மன ஓட்டமும் எப்படி இருக்கும்..? அழகாக செதுக்கியுள்ளார் கல்கி..
வாழ்வு ஒன்றும் பெரிதல்ல இறப்பே மேல்... இறப்பு எனக்கு இன்று வேண்டாம் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்ற எண்ணம் இரண்டும் ஒரு ஆண் மகனுக்கு அடிக்கடி மாறி மாறி வருகின்ற சூழல் என்பது இயல்பே... முதல் வரி இறந்து போக வேண்டும் என்ற தற்கொலையை குறிப்பது அல்ல.. இறப்பே வரினும் இந்தக் காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற ஆண்மையை குறிப்பதற்கு... இரண்டாவது வரி இந்த அன்பை விட்டு இறந்தேதும் பொய் விடக்கூடாது என்று ஏக்கத்தைக் குறிப்பது.. இந்த இரண்டு எண்ணங்களும் ஒரு நொடி பொழுதில் மாறி மாறி வரும் காட்சிகள் இந்த நாவலில் அனேக பக்கங்களில் காணலாம், அத்தனையும் மனம் நெகிழும் காட்சிகள்...
எல்லா காதல் கதைகளும் காவியங்களாக மாற என்ன இலக்கணமோ, அதே இலக்கணத்தைதான் இந்நாவலுக்கும் கையாண்டு இருக்கிறார் கல்கி..
துவக்கத்திலிருந்து இறுதிவரை ஒரு தொடர்வண்டி நம்மை சுமந்து செல்வது போல அழகாக சுமந்து செல்கிறது கல்கியின் சோலைமலை இளவரசி நாவல்..
சோலைமலை இளவரசியின் சொல் அழகில் மயங்க மறக்காமல் வாசியுங்கள் இப்புத்தகத்தை...
விமர்சனம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- சோலைமலை இளவரசி
ஆசிரியர் பெயர் :- கல்கி

Comments
Post a Comment