பிணம் நடந்த மர்மம் - நூல் அறிமுகம்



சிறுவர்களுக்கான மர்ம நாவல் வகையை சேர்ந்த இந்த நூல், வங்க மொழி எழுத்தாளரான திரு சத்யஜித் ரே அவர்களால் எழுதப்பட்டது.. தமிழில் இதை மிக அழகாக மொழிபெயர்த்துள்ளார் வி.ப.கணேசன் அவர்கள்..

சத்யஜித் ரே அவர்களுடன் நேரடியாக பழக்கம் கொண்டவர் இவர் என்பதால், இவருடைய மொழிபெயர்ப்பில் மிகுந்த தெளிவு உள்ளது.. மொழிபெயர்ப்பு நூல் போல தெரியாமல், குழந்தைகளுக்கு எழுதப்பட்ட நூல் என்ற சாரம் குறையாமல், அழகாக மொழிபெயர்த்துள்ளார்...

பிணம் நடந்த மர்மம் என்னும் இந்த நூல் ஃபெலூடா வரிசை நாவல்களுள் ஒன்று, வங்க மொழியில் இவ்வகை நாவல்கள் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கியது..

ஃபெலூடா என்பவர், அவருடைய நண்பர்களுடன் ஒரு கொலை முயற்சி வழக்கை விசாரிப்பதற்காக ஒரு கிராமத்திற்கு பயணப்படுகின்றார்..

அந்த கிராமம், மிகவும் வித்தியாசமான நடைமுறைகளை கடைபிடித்து வருகின்ற கிராமமாக உள்ளது.. மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள அந்த கிராமத்தில், இவரும், இவருடைய நண்பர்களும் தங்கியிருந்து அந்த கொலை முயற்சி வழக்கை கண்டறிந்தார்களா என்பதே கதையின் மையக்கரு...

கொலை முயற்சி நடந்த வீட்டில் உள்ள ஒரு ஜமீன்தார், மின்சாரத்தை தவிர்த்து, புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பொருட்கள் அனைத்தையும் தவிர்த்து, பழைய கால நடைமுறை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது போல கதாபாத்திர வடிவமைப்பு கதைக்கு சுவாரசியத்தை தருகிறது.. அதற்கான காரணமாக சொல்லப்படும் கதை, ஒரு மனிதன் தன்னுடைய உயிருக்கு எவ்வளவு ஆசையாய் இருக்கின்றான்.. அதை தக்க வைக்க என்னவெல்லாம் செய்கின்றான் என்றும் நம்மை யோசிக்க செய்கிறது..

உயிர் மட்டும்தான் மனிதன் பிடித்துக் கொண்டு அலையும் விஷயமா..? ‌ அடுத்த இடத்தில் பணம், பணத்தை மனிதன் பிணமாகும் வரை கையில் இறுகப் பிடித்துக் கொண்டு அல்லவா அலைகிறான்.. அதுவும் மிக முக்கியமாக தன் சொந்த பந்தம்.. பெற்ற பிள்ளைகளை கூட, பணம் சந்தேக கண்கொண்டல்லவா பார்க்க வைத்து விடுகிறது.. எங்கும் அப்படித்தான் நடக்கிறது..இங்கும் அப்படித்தான் நடக்கிறது..

அவரின் உயிர் மற்றும் பணத்தின் மீது கொண்ட பற்று என்னவெல்லாம் செய்கிறது.. யார் யார் உயிர்க்கெல்லாம் ஆபத்து வருகிறது என்று கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

கொலை முயற்சி வழக்கை விசாரிக்க வந்த ஃபெலுடாவை குழப்பிய விஷயங்கள் என்னென்ன.. அவர் தெளிவடைந்தாரா.. இந்த வழக்கில் அவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டாரா... தோற்ற பிறகு அவர் யாரை நம்பினார்.. ஏன் அவரை நம்பினார்.. இறுதித் திருப்பங்கள் என்னென்ன... என விறுவிறுப்பாக செல்கிறது புத்தகம்.. குறிப்பு இது பெரியவர்களுக்கான நாவல் இல்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும் இதில் ரத்தங்கள் தெறிப்பதில்லை.. பல உயிர்கள் இறப்பதில்லை.. ஆனாலும் அழகிய மர்ம நாவல்.. 14 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் நிச்சயம் படிக்கலாம்..

விமர்சனம் செய்தவர் :- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- பிணம் நடந்த மர்மம்
புத்தகத்தின் ஆசிரியர் :- சத்யஜித் ரே (தமிழில் வி.ப. கணேசன்)

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்