செவ்விந்தியக் கழுகு - நூல் அறிமுகம்
மனிதன் தோன்றிய காலம் முதல் ஏன்..? எவ்வாறு..? என்ற கேள்விகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன..
அறிவியல் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் இந்த கேள்விகளுக்கு, கற்பனா சக்தியின் மூலம் கட்டுக்கதைகளாக பல பதில்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன...
மிக முக்கியமாக இயற்கையின் செயல்பாடுகளுக்கு, மனிதர்கள் கட்டமைத்த கட்டுக்கதைகள் கடவுளாகி, விதிகளாகி, மதங்களாகி, ஆலமரம் போல் எங்கும் பரவி வந்தாலும்... அறிவியல் ஆய்வுகள் இவற்றை மூட நம்பிக்கைகள் என்று நிரூபித்துக் கொண்டே தான் இருக்கின்றன...
ஆனாலும் இவற்றில் சில கதைகள் அல்லது பதில்கள் ரசிக்கும் படியாக அமைந்து விடுகின்றன.. இது உலகில் அனைத்து இடங்களிலும், அனைத்து மக்களுக்கும் பொதுவான கூற்றாகவே உள்ளது...
ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் அடிமைப்படுத்துவதற்கு முன்பு அமெரிக்காவில் நவயோ, அப்பாசே, ஷியானி, யகாமா, ஷோஷோன், ஈரோக்வா போன்ற செவிந்திய இனக்குழுக்களை சேர்ந்த மக்கள் தான் வாழ்ந்து வந்தனர்.. இவர்களில் ஈரோக்வா இன மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சார்ந்த ஏழு கதைகளை தான் இந்நூல் நமக்கு கூறுகிறது..
நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு "இடத்தை கொடுத்தால் மடத்தை கேட்பானாம்".. முதல் கதையில் காட்டெருமை தோலை கொண்டு வட்டம் போடும் அளவு வெள்ளையர்களுக்கு செவ்விந்தியர்கள் இடம் கொடுத்ததாகவும், இன்று அதே காட்டெருமை தோலில் வட்டமிடும் அளவே எங்களுக்கு இடம் உள்ளது என்றும் கதையாக கூறி வெள்ளையன் எவ்வாறு ஏமாற்றி தங்களை அடிமைப்படுத்தினான் என்பதை, தன் சந்ததியினருக்கு கதையாக கூறியுள்ளனர்..
செவ்விந்தியர்கள் கைகளை நீட்டினால், எங்கிருந்தாலும் பறந்து வந்து அமருமாம் கழுகு.. கழுகுக்கும், செவ்விந்தியர்களுக்கும் அப்படி ஒரு நட்பாம், அதற்கான காரணத்தை கூறுகிறது இரண்டாம் கதை.. கிட்டத்தட்ட டார்சான் படம் ஞாபகம் வந்தது..
மொட்டைத் தலை கழுகின் கதை கற்பனையின் உச்சம் என்றே சொல்வேன்.. ஒரு அழகான கதையில், பேராசை பெரும் நஷ்டம் என்பதையும் உணர்த்தி, அந்த கஷ்டத்தின் அடையாளமாக மொட்டைத் தலை கழுகை உவமையாக்கி உள்ளனர்..
கௌதாரிகளை சாத்தான்களின் படைப்பாகவும், பல பறவைகளின் அழகான குரல்களை கெடுக்கவே, சாத்தான் அதனைப் படைத்து, படபடக்க செய்துள்ளார் என்று கூறும் கதையின் முடிவில், இது மூடநம்பிக்கையே என்று சொல்லும் விதமாக சரவணன் பார்த்தசாரதி கதையை முடித்துள்ளார், இது பாராட்டு கூறியது
தொட முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை என்பதை பூஞ்சிட்டுக் குருவியின் கதை உணர்த்துகிறது, ஆனாலும், தொட முடியாத இலக்கினை தொட சில செயல்களை செய்து, அதன் காரணமாக வெளியில் தலை காட்ட முடியாமல், இருளில் மட்டும் பாடும் பூஞ்சிட்டின் நிலை, இன்னும் சில கருத்துக்களை நமக்கு சொல்லாமல் சொல்கிறது..
மூலிகைகளைக் கொண்டு மருத்துவம் பார்ப்பது என்பது பல நாடுகளில் உள்ளது, இந்த மருத்துவத்தை வழி வழியாக முன்னோர்களின் மூலம் நாம் அறிந்து வருகின்றோம், இதை முதன் முதலில் அறிந்தவர் யார்..? எனச் சிந்திக்கும் போது வந்த கற்பனை தான் ஆறாவது கதை...
பெரும்பாலான காடுகளில், இரண்டு மரங்கள் பின்னிப் பிணைந்து வளர்ந்திருப்பதை நாம் காண முடியும், அதற்கும் ஒரு கதை சொல்லி வைத்திருக்கிறார்கள் இந்த புத்தகத்தில்...
"எல்லாம் வல்லது இயற்கை
எல்லோருக்கும் அவள்தான் அன்னை
அவளை மிஞ்சியது எதுவும் இல்லை"
நம்புவதற்கு முடியாத கதைகள் தான், ஆயினும், அவெஞ்சர்ஸ் படங்களை போல அனுபவிப்பதற்கு ஏற்ற கதைகளாகவே உள்ளது.. இந்தச் செவ்விந்திய கழுகை, குழந்தைகளின் கைகளில் தாராளமாக பறக்க விடலாம்..
புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- செவ்விந்தியக் கழுகு
ஆசிரியர் பெயர் :- மேபல் பவர்ஸ் ( தமிழில் :- சரவணன் பார்த்தசாரதி)

Comments
Post a Comment