ஆசை அகத்தினையா - நூல் விமர்சனம்
ஆசை அகத்திணையா என்ற இந்த புத்தகத்தில், ஒரு பெண்ணின் மனதின் 64 பக்கங்களை மட்டும் திறந்து காட்டி இருக்கின்றார் கவிஞர் சுமித்ரா சத்தியமூர்த்தி அவர்கள்..
அதில் 21 ஆம் பக்கத்திலேயே புதைந்து போய்க் கொண்டிருக்கின்றேன் நான்..
"புதைந்து போனதாய் சொன்ன பொருள் ஒன்றை புதுதாய் தேடத் தொடங்கி இருக்கிறான் இப்பொழுது எல்லாம்..."
ஆம்... அடிக்கடி ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைப்பது ஆணின் வழக்கமல்லவா...
புதைந்து போனதாய் சொன்ன பொருள் அவன் இழந்த காதலி.. தேடத் தொடங்கிய கணமோ.. இவள் வந்து இல்லறம் ஆரம்பித்த பிறகு.. ஒரு பெண்ணாய் அவள் நிலை என்ன.. அவள் மனது என்னென்ன பேசும்.. இறுதியாய் அவள் மனது இசைகிறது அவனுக்கு..
"வேறென்றும் தோன்றாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.. தொலைக்கப்பட்ட ஒன்று நிச்சயம் தேடப்படும் தானே..."
தொலைக்கப்பட்ட ஒன்று நிச்சயம் தேடப்படும் தானே?- ஆஹா என்ன அருமையான வரிகள்...ஆண் மனதை புரிந்து கொண்ட பெண் அல்லவா.. ஒதுங்கிக் கொள்வாளா..? அல்லது அவள் தேவையை அடாவடியாய் இறுத்திக் கொள்வாளா..? இதோ அடுத்த வரி
"புதையுண்ட பொருள்தேடி தோன்றிய புழுதியில் புதைந்து போகிறேன் சிறிது சிறிதாய்"
என்னவாக இருக்கும்.. ? அவன் அவள் தேடி சென்ற வழி எல்லாம், இவன் தேடி இவள் சென்றிருப்பாலோ..? நெருப்பில் நடக்கும் யாத்திரை அல்லவா அது..!
அவன் அலைபேசியிலோ.. அவன் வலி பாதையிலோ.. ஆழ்ந்து தேடி, அப்பிக் கொண்ட புழுதியில்.. அவள் மனம் நிச்சயமாக இறந்து, புதைந்தல்லவா போகி இருக்கும்...இதன்பிறகு அவள் வார்த்தைகள் எப்படி இருக்கும்... இதோ
"புதையலாகிய பொக்கிஷம் மறைந்து கொள்ளுமாம் குருதி பலி கேட்குமாம்..."
அவனை இழந்து விடுவோம் என்ற எண்ணம் ஊற்றெடுக்க.. பதை பதைக்கின்ற பெண் மனம் இதோ பேச ஆரம்பித்து விட்டது..
அவளோடு போனால் தான் இன்பம் என்றால் போ.. ஆனால் அந்த பொக்கிஷம் பலியிடாமல் கிடைக்காது.. இங்கு யார் பலியாடு..?
"இதோ என் நேசத்தின் குரல்வளை அறுத்து குருதியை குழியில் இடு நீ தேடும் பொக்கிஷமாவது உன் கை சேரட்டும்..."
எனது எனது.. இது மிரட்டலா... அல்லது நீ போ என்ற விட்டுக் கொடுக்கும் மனமா.. இரண்டும் இல்லை.. இரண்டுக்கும் இடையில் தான் பெண் மனம் எப்போதும் ஊசலாடுகிறது.. அதுதான் இக்கவிதை வரியெங்கும் நிறைந்து ஓடுகிறது..
முக்கியமாக இக்கவிதையின் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் படித்து பாருங்கள்..
"நீ தேடும் பொக்கிஷமாவது" என்ன என்ன "நீ தேடும் பொக்கிஷமாவது" உன் கை சேரட்டும்
இதன் பொருள் இன்னும் இன்னும் கவிதையை ஆழப் படுத்துகிறது..
ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இக்கவிதையின் பொருள் நீண்டு கொண்டே போகிறது.. ஆழமும் அகலமும் ஒருங்கே கூடிக் கொண்டே போகும் இக்கவிதை ஒன்றே போதும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா..
பெரும்பாலும் மௌனங்களும், தனிமைகளும், வெறுமைகளும் நிறைந்து வரிகளுக்கு இடையிடையில் ஏதோ ஒன்றை இறுகப்பற்றி இன்று இல்லையேல் நாளை என்ற நம்பிக்கையிலேயே பயணப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்மையின் அத்தனை உண்மைகளையும் உறக்க பேசுகிறது இந்த நூல்..
படித்துப் பாருங்கள் ஆசை அகத்திணையை.. ஆணுக்குள் இருக்கும் பெண்ணைக் கூட அடித்தெழுப்பி பெண்ணியம் பேச வைக்கும்..
புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- ஆசை அகத்திணையா
ஆசிரியர் பெயர் :- க. சுமித்ரா சத்தியமூர்த்தி

Comments
Post a Comment