உயிருடன் எரிக்கப்பட்ட புரூனோ - நூல் அறிமுகம்
உலகம் முழுவதிலும் பல வகையான மதங்களும், அதில் பலவகையான கடவுள்களும் இருக்கின்றனர்... இவைகளில் பல வேற்றுமைகள் இருந்தாலும், அனைத்திலும் உள்ள ஒரே ஒற்றுமை மூடநம்பிக்கை..
கண்மூடித்தனமாக, கேட்டதை அப்படியே நம்பும் மூடர் கூட்டம் தான் மதங்களின் அடிநாதம்... எதிர்த்து வரும் ஒற்றைக் கேள்வி மதங்களின் ஆணிவேரையே ஆட்டி விடுகிறது... அந்தக் கேள்விக்கு சரியான பதில் அவர்களிடம் இல்லாத போது, தன் இயலாமை, கோபமாய் மாறி,
இவன் கடவுளை எதிர்த்து கேள்வி கேட்கின்றான், இவன் நமக்கு எதிரானவன், இவன் நரகத்தின் வாசல், இவன் இங்கு இருக்க வேண்டியவன் அல்ல என ஏதேதோ கூறி, எதிர் கேள்வி கேட்டவனை மற்றவர்களைப் போலவே அடக்கி ஒடுக்க பார்க்கின்றார்கள்..
பலர் மிரட்டலுக்கு பணிகின்றனர்.. வெகுசிலர், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதாடி தன் உயிர் துறக்கின்றனர்... அப்படி ஒரு மாமனிதன்தான் புரூனோ...
இங்கிலாந்தில் பிறக்கும் இவர், முதலில் அவர் தந்தையை போலவே மத போதகராக மாறுகின்றார்.. பின்னர் தன்னுடைய பகுத்தறிவினால் மதங்கள் கூறும் பல கருத்துக்களுக்கு எதிராக நிற்கின்றார்.. தன் வாழ்நாள் முழுக்க, வெவ்வேறு நாடுகளுக்கு ஓடி ஒளிந்து வாழும் வாழ்க்கையினை ஏற்கின்றார்..
ஆயினும் இவருடைய நினைவாற்றல் திறத்தினால் மக்களையும், மன்னர்களையும் கவர்ந்து தன் பக்கம் நிற்கவைக்கின்றார்.. பல புத்தகங்களை எழுதுகிறார்.. அத்தனை புத்தகங்களையும் இடையூறு இல்லாமல் இவர் வெளியிட்டதே கிடையாது.. இவரின் பெரும்பாலான புத்தகங்கள் தடை செய்யப்பட்ட புத்தகங்களாகவே இருக்கின்றன..
கடவுளின் மொழியாக கருதப்படும் மொழியினை கண்டு கொள்ளாமல், மக்கள் பேசும் எளிமையான மொழியினை கொண்டு புத்தகத்தை எழுதுகின்றார்... கடவுளின் மொழி மட்டுமல்ல, எந்த ஒரு மொழியும் புனித மொழியே என உரக்க சொல்கின்றார்...
இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.. அனைத்தையும் எதிர்த்து நிற்கின்றார்.. இறுதியில் இவர் எழுதிய புத்தகங்களே, இவருக்கு எதிரான ஆதாரங்களாக மாறுகின்றன.. தான் கூறிய கருத்துகளில் உறுதியாக நிற்கின்றார்..
மதத்திற்கு எதிரானவர் என குற்றம் சாட்டப்பட்டு, பொதுவெளியில், மக்கள் கூடும் சந்தை பகுதியில், தலைகீழாக தொங்கவிடப்பட்டு எரித்து கொல்லப்படுகிறார்..
கொல்லப்படும் நேரத்தில் கூட, அவர் பேசி விடக்கூடாது என்று அவர் நாக்கில் ஆணி அடித்து அழைத்துச் செல்லப்படுவதே, எதிர்த்து பேசினால் மதம் எவ்வளவு பயந்து போகிறது என்பதற்கான ஆதாரம்..
இன்று அதே இத்தாலியில், அவர் அறிவியலுக்காக உயிர் துறந்த தியாகியாக போற்றப்படுகிறார்.. அவர் எரிக்கப்பட்ட இடத்தில் மிக உயரமான சிலையாக, கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றார்.. வரலாற்றின் மிகப்பெரும் பிழையாக, அவர் எரிக்கப்பட்ட நாள் கருதப்படுகிறது...
மதம் மட்டுமல்ல அரசியலும், அதிகாரிகளும், ஏன் பல நேரங்களில் ஆசிரியர்கள் கூட அதிர்ந்து போகின்றார்கள் எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எதிர்கொள்ள...
எதிர் கேள்வி கேட்பது எவ்வளவு முக்கியம் என மாணவர்களுக்கு அறிவிக்கக்கூடிய நூல் இது...
ஆயினும், மாணவர்கள் அவர்களாகவே படித்து புரிந்து கொள்ளும் தோனியில் இப்புத்தகம் எழுதப்படவில்லை, ஒரு பெரிய வாழ்க்கையினை, சிறிய பக்கங்களுக்குள் அடக்க முயற்சி செய்திருப்பதால் பெரும்பாலும் மாணவர்களால் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... சிறுவர்களுக்கான நடையினை கையாண்டு இருந்தால் புத்தகம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்..
புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- உயிருடன் எரிக்கப்பட்ட புரூனோ
ஆசிரியர் பெயர் :- சி ராமலிங்கம்

Comments
Post a Comment