பிள்ளையாருக்குப் பின்னே மர்மம் - நூல் அறிமுகம்
வங்க மொழி எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட சத்யஜித் ரே அவர்களின், ஃபெலூடா கதை வரிசைகள் மிகவும் புகழ்பெற்றவை, அவற்றில் ஒன்றுதான் பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்...
குழந்தைகளுக்கான துப்பறியும் நாவல் வகமையைக் கொண்ட இந்நாவலை தமிழில் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார் வி.பா.கணேசன் அவர்கள்..
ஃபெலூடா என்பவர் ஒரு மிகச் சிறந்த புகழ்பெற்ற துப்பறியும் நிபுணர், தமது திறமைக்கேற்ற, சவாலான துப்பறியும் பணி கிடைக்காமல், சிறிது நாட்களாக அன்றாட அலுவல்களை மேற்கொண்டு இருக்கிறார்.. லால்மோகன் சிறந்த துப்பறியும் நாவல்களை எழுதுபவர், அடுத்த நாவலுக்கு கதை கிடைக்காமல், ஃபெலுடாவை சந்திக்க வருகிறார்.. இவர்கள் இருவரும் வாரணாசி சென்று சில நாட்களை கழிக்க முடிவு செய்கின்றனர், அவர்களோடு தபேஷ் என்பவரும் இணைந்து கொள்கிறார்...
இவர்கள் மூவரும் வாரணாசியில் சந்தித்த நபர்கள்.. அங்கு கிடைக்கும் ஒரு துப்பறியும் பணி... அதனால் பெலூடாவுக்கு வந்த சவால்கள்.. இறுதியில் காணாமல் போன அந்தப் பிள்ளையார் சிலை கிடைத்ததா இல்லையா என விறுவிறுப்பாக, பல திருப்பங்களோடு நகர்கிறது இந்தக் கதை...
இந்த கதையில் ருத்ரா என்ற ஒரு சிறுவன் கதாபாத்திரம் ஓன்று உண்டு... நம் சிறுவயதில் சக்திமான் நாடகத்தை பார்த்து அதனுடன் எவ்வாறு ஒன்றி இருந்தோமோ.. பல விபரீதங்கள் அதன் மூலம் எவ்வாறு நடந்ததோ.. அதுபோல், இந்தச் சிறுவன் தன்னைத்தானே ஒரு கதாபாத்திரமாக கற்பனை செய்து கொண்டு செய்யும் செயல்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும்... சிறுவர்களுக்கு எதை கொடுக்க வேண்டும், எதைக் கொடுக்கக் கூடாது என நம்மை சிந்திக்கவும் தூண்டுகிறது... கதையின் இறுதி காட்சியின் பல திருப்பங்களுக்கு இந்த கதாபாத்திரமும் காரணமாக வருவது கதையின் சிறப்புகளில் ஒன்று...
வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்பதற்கு ஏற்ப, வெறும் படுக்கையினை பார்த்து, உறங்கியவன் குறட்டை விடுவானா இல்லையா என்று கண்டுபிடிக்கும் அளவு திறமையான துப்பறிவாளான பெலுடாவை, தான் ஒரு துப்பறியும் நிபுணரே இல்லை, என்னால் இது முடியவில்லை என புலம்ப வைத்திருக்கும் கதை இது... சுவாரசியங்களுக்கு பஞ்சமே இல்லை.. கடைசியில் இப்படி புலம்ப வைத்தது யார் என அறியும்போது புருவம் விரிகிறது...
பத்துக்குள்ளே ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் நினைத்த எண் 7 ஆ? இப்படி ஒரு எண்ணை, நினைத்துக் கொள்ள சொல்லும் போது 80 சதவீதம் பேர் 7 என்ற எண்ணை மட்டுமே கூறுவார்கள் எனக் கூறுகிறாள் பெலூடா...
ஆழ்ந்து சிந்திக்க தெளிவான மனமும்.. தெளிவற்ற சிந்தனையும் தேவை என்கின்றார்...
கதை அவருடன் பயணிக்கும் தபேஷ் என்பவரின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பது.. விறுவிறுப்பை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது...
சிரமம் இல்லாத தமிழாக்கமும்... பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதைக்களமும்... பக்கத்துக்கு பக்கம் திருப்பங்களும் நிறைந்த.. பிள்ளையாருக்கு பின்னே மர்மம் என்கின்ற நாவல் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த விருந்து...
புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :-பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்
ஆசிரியர் பெயர் :- சத்யஜித் ரே (தமிழில் :- வீ.பா. கணேசன்)

Comments
Post a Comment