சந்துருவுக்கு என்னாச்சு - நூல் அறிமுகம்

புதிதாய் ஏதோ ஒன்றை பார்க்கும் போது, அது என்ன என்று தெரிந்து கொள்ள‌ பொதுவாகவே குழந்தைகளிடம் ஆர்வம் அதிகமாகவே உண்டு...

அது நல்ல விடயங்கள் ஆனாலும் சரி, கெட்ட விடயங்கள் ஆனாலும் சரி...

ஒரு விடயத்தைப் பற்றி முழுதாய் தெரிந்து கொள்ளாமலேயே, அது நல்லதா அல்லது கெட்டதா என குழந்தைகள் எவ்வாறு அறிவார்கள் ? அதனால், அனைத்தையும் பற்றி நம்மிடம் கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருப்பார்கள்...

நல்லதை பற்றி கேட்கும் போது நாம் பதில் சொல்ல எந்த பிரச்சினையும் இல்லை...

ஆனால் சங்கடமான அல்லது மறைக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி வெளிப்படையாக கேள்விகளை கேட்கும் போது, நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை பொறுத்து, அவர்கள் எதை நோக்கி செல்ல போகிறார்கள் என்பது உள்ளது...

இந்த கதையிலும் தருண் என்ற சிறுவனுக்கு அது போன்று ஒரு கேள்வி எழுகிறது..

தருண் தனது விடுமுறையை கழிக்க, நகரத்துக்கு, தன்னுடைய பெரியம்மா வீட்டுக்கு வருகின்றான், அந்த வீட்டில் சந்துரு என்ற அண்ணனுடன் சேர்ந்து விளையாண்டு, பொழுதை கழிப்பது அவனுடைய திட்டம்...

ஆனால் சந்துரு ஒரு ஆட்டிச குறைபாடு உடைய குழந்தை.. அதனால் அவனால் தருணுடன் விளையாடவோ, சகஜமாக பேசவோ இயலவில்லை.. ஏன்? எதனால்?-என இயல்பாக அவனுள் கேள்வி எழுகின்றன..

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மற்ற குழந்தைகள் எல்லாம் சந்துருவை லூசு என்று அழைக்கவே, தருணுக்கு ஒரே குழப்பம், "நம்ம அண்ணா ஒரு லூசா"-என தனக்குத்தானே கேட்டுக் கொள்கின்றான் ஒரு கட்டத்தில் பொறுக்க இயலாமல், பெரியவர்களிடமும் கேட்க ஆரம்பிக்கிறான்,

இந்த கேள்விக்கு சந்துருவினுடைய அம்மா கொடுக்கும் பதில் என்ன ? தருணுக்கு அந்த பதில் புரிந்ததா? இதுதான் இந்த புத்தகத்தின் கதை...

ஒரு குறைபாடு உடைய குழந்தையின் பெற்றோருக்கு, எவ்வளவு பொறுமையும், நிதானமும் அவசியமோ, அத்தனை பொறுமையையும் நிதானத்தையும், தன்னுள் கொண்டுள்ளார் சந்துருவின் அம்மா..

இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் குறைபாடு உடைய குழந்தைகளை அந்த குறைபாடை கொண்டே பெயர் வைத்து அழைப்பது தவறு என சிறுவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள், சந்துருவின் நிலையையும் அதுபோல் உள்ளவர்கள் நிலையையும் மாணவர்கள் உணர்ந்து தன்னைத்தானே திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கும் புத்தகம் சந்துருவுக்கு என்னாச்சு....

ஆசிரியர் எஸ் பாலபாரதி இதை குழந்தைகளுக்காக மட்டுமே எழுதவில்லை என நினைக்கின்றேன், குழந்தைகளை விட மோசமாக உள்ள சில பெரியவர்களுக்காகவும் இந்த புத்தகத்தை தந்துள்ளார்.. மாற்றம் பெரியவர்களிடமிருந்து துவங்க வேண்டும்...

புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- சந்துருவுக்கு என்னாச்சு
ஆசிரியர் பெயர் : எஸ் பாலபாரதி

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்