ஒரே ஒரு ஊர்ல-நூல் அறிமுகம்

இப்புத்தகம் ஒரு சிறார் நாவல் வகைமையைச் சேர்ந்தது.. மிக மிக எளிய நடை ஆனால் விறுவிறுப்புக்கு எந்த குறைவும் இல்லை.. முக்கியமாக கதையின் கதாபாத்திரத்தை இவர் அறிமுகம் செய்யும் விதம் சிறப்பு, எடுத்துக்காட்டாக, ஆராதனா என்ற சிறுமியையும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களையும், அச்சிறுமி வளர்க்கும் நாய் அறிமுகம் செய்வது போல எழுதி இருக்கும் நடை அழகு..

அவ்வப்போது கதையை நான் சொல்கிறேன், நீ சொல் என கதாபாத்திரங்களே தங்களுடைய கதைகளைத் தாங்களே மாற்றி மாற்றி சொல்லிக் கொள்ளும் விதமாக இக்கதையை விழியன் கையாண்டுள்ளார்..

அருண், ஆராதனா, சரவணன், செந்தில் என்ற நான்கு நண்பர்களும், அவர்களின் குடும்ப ஏற்றத்தாழ்வுகளும், ஆனாலும் அவர்களுக்குள் உள்ள நட்பும், அச்சிறுவர்கள் அவர்களுக்குள் அவர்களாகவே செய்து கொள்கின்ற உதவிகளும், அதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பும்ணகதைகளாக நீள்கிறது

பள்ளியின் தொடர் விடுமுறை காலத்தில், அவர்கள் தங்கள் பொழுதுகளைப் போக்க எடுத்துக் கொள்ளும் முயற்சி, அதனால் உண்டாகும் ஒரு சிறிய பயணம்.. அந்த பயணத்தில் ஏற்படுகின்ற அனுபவமே கதையின் கரு...

வாழ்க்கையில் ஒரு புதிய

உறவை சிறியவர்கள் எவ்வளவு அழகாக, நொடி பொழுதில் ஏற்றுக் கொள்கின்றனர்!…அதேபோல அந்த உறவின் பிரிவை கூட அவர்கள் எவ்வளவு அழகாக கையாளுகின்றனர் என இக்கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்..

இந்த விஷயத்தில் சிறியவர்கள் பெரியவர்களாகவும், பெரியவர்கள் சிறியவர்களாகவுமே நடைமுறை வாழ்க்கையில் உள்ளனர்..

வாழ்க்கை என்பது கூட்டி கழித்து வாழ வேண்டிய கணிதம் அல்ல அதுபோக்கில் இயல்பாய் அனுபவித்து வாழும் சிறுவர்களின் உடைய இதயம் என்றுமே இக்கதையினை போல அழகானது...

கைவிடப்பட்ட ஒரு சிறிய இடம் கூட, குழந்தைகளுக்கு, மிகப் பெரிய அரண்மனைகள் கொடுக்கக்கூடிய சுகத்தை விட, பன்மடங்கு சந்தோஷத்தை, கொண்டாட்டத்தை கொடுத்து விடுவதை, இக்கதையில் காண முடிகிறது...

மிக முக்கியமாக, அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் போது, ஒரு சிறுவன் மட்டும் தொலைந்து போவது போல கதையில் ஒரு காட்சி, அவன் என்ன ஆனான்? ஏதேனும் ஆகியிருக்குமோ? என்ன நடந்திருக்கும்? என என்னென்னமோ பொய் கற்பனைகளுடன் படித்த எனக்கு இறுதியில் நடந்ததை அறிந்தவுடன்.. இப்படிப்பட்ட கற்பனைகளால் தான் அத்தனை இன்பத்தையும் பெரியவர்கள் தொலைத்து நிற்கிறார்கள் என புரிந்தது..

படித்துப் பாருங்கள்.. குழந்தைகளுக்கு படிக்க தாருங்கள்..

புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- ஒரே ஒரு ஊருல நண்பர்களும்
ஆசிரியர் பெயர் :- விழியன்

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்