பொய்மான் கரடு - நூல் அறிமுகம்



பொன்னியின் செல்வன் போல பெரிய பெரிய ராஜாக்களோ ராணிகளோ எவரும் இல்லை...

இந்த கதையில் வரும் அனைவருமே சாதாரண ஏழை எளிய மக்கள்...

மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த செங்கோட கவுண்டன், கதையின் நாயகன்...

அவனை மட்டுமே திருமணம் செய்து கொள்ள நினைக்கும் செம்பா, கதையின் நாயகி..

இரு வழி பாதையாய் இருவரும் ஒரு வழியில் சென்று கொண்டிருக்கையில்.. நாயகனின் மனதை குழப்பும் மாதவியாய் வந்து சேருகிறாள், பங்கஜம் என்ற சினிமா ஆசை கொண்ட வருங்கால நடிகை...

அவளுடனே சேர்ந்து அந்த ஊருக்கு புதுவரவாய் இரண்டு ஆண்கள்.. இவர்கள் மூவரால் செங்கோட கவுண்டன் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம்.. அவர்கள் ஏன் அந்த ஊருக்கு வந்துள்ளனர்? அவர்கள் ஆசை நிறைவேறியதா? என நீள்கிறது இக்கதை...

இந்த குழப்பத்தினுள் இடையிடையே வந்து வந்து போகும், நேர்மையாக பணிபுரியும் ஒரு போலீஸ் அதிகாரி... கதையின் கடைசி பக்கத்தில் இந்த போலீஸ் கதாபாத்திரத்தால் ஒரு ஆச்சரியம், அது இக்கதையின் அற்புதம்...

நான் படித்த வரையில் எந்த ஒரு கொலையும் நடக்காமல், ஒரு க்ரைம் திரில்லர் நாவல் வேண்டுமென்றால், அது பொய்மான் கரடாகத்தான் இருக்கும். (பின்குறிப்பு :-ஒரே ஒரு நாய் மட்டும் இறந்ததா அல்லது பிழைத்ததா என்று விவரம் இல்லாமல் விடுபட்டிருக்கும்...)

செங்கோட கவுண்டனின் கதாபாத்திரம் ஒரு எளிமையான ஆணின் கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலித்துள்ளது... அதுவும் கல்யாணத்துக்கு முன் உள்ள அந்தக் குழப்பம்..

செம்பாவை காதலித்தாலும், அடிக்கடி பங்கஜமா? செம்பாவா? என தன்னுடைய மன தராசில் வைத்து, எடை போட்டுக் கொண்டே இருப்பது ரசனைக்கு விருந்தாக உள்ளது... அந்த மனிதனின் கஞ்சத்தனம் நம்மை படிக்கும் போதே புன்னகை புரிய வைக்கிறது...

செம்பா, தன்னுடைய காதலனுக்காக எதையும் செய்யும் ஒரு கிராமத்து தேவதையாக வருகிறாள்.. முக்கியமாக இந்த நாவலில், பெண்ணைப் பற்றிய வர்ணனைகள் பெரிதாக எதுவும் இல்லை, இதுவும் இந்நாவலின் தனி சிறப்பாகவே கருதுகின்றேன், ஏனெனில் அங்கங்களை வர்ணிக்காமலேயே ரசிக்க வைக்க முடியும் என நிரூபித்து காட்டி இருக்கிறது இந்நாவல்

குறைந்த பக்கத்தில் கல்கியின் உடைய முழு ஆற்றலை அனுபவிக்க வேண்டுமா கையில் எடுங்கள் பொய்மான் கரடை...

பின்குறிப்பு:- நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பொய்மான் கரடு எனும் ஒரு சிறிய கரடு இந்த நாவல் வாசித்த பிறகு யூடியூபில் தேடிப் பார்த்தேன் வியந்து போனேன் நீங்களும் தேடிப் பாருங்கள் உங்களுக்கும் வியப்பு காத்திருக்கிறது...

புத்தக அறிமுகம் செய்தவர்:- இரா.இரஞ்சித்
புத்தகத்தின் பெயர் :- பொய்மான் கரடு
ஆசிரியர் பெயர் : கல்கி

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்